அவன் ஒரு நாள் , எங்க ஆத்துக்கு திருட வந்துருக்கான். எங்க ஆத்துக்கு முன்னாடி பெரிய நாத்து படப்பு இருக்கும். நாத்துன்னா சோளக் கதிரை எடுத்துட்டு பாக்கி இருக்கிற போர்ஷனை மட்டும் தீவனத்துக்காக வச்சுப்பா அதுதான் நாத்து.அதை கட்டுக் கட்டடா கட்டி ஒண்ணுக்கு மேல் ஒண்ணா வச்சு அடுக்குவா.அடுக்கி முடிஞ்சப்பறம் தண்ணி உள்ள போகாத மாதிரி கம்மந்தட்டையை வச்சு கூரை மாதிரி போட்டுடுவா. இதுக்கு பேர்தான் படப்பு. .அந்த படப்பு 15 அடி அகலம் 15 அடி உயரம் 20 அடி நீளம் இருக்கும். அந்த படப்புக்கு பின்னாடி .
பம்பயத் தேவன் ஒளிஞ்சுண்டு வெயிட் பண்ணிண்டு இருந்துருக்கான். வாசல் திண்ணையில் தான் எங்க ஆத்துல எல்லாரும் படுத்து தூங்குவோம்.
எங்க அப்பாவுக்கு முழிப்பு வந்துடுத்து. படப்புக்கு பின்னாடி ஏதோ சத்தம் கேட்டு, யாருடா அதுன்னு அதட்டல் போட்டவுடன் அவன் ஓட ஆரம்பிச்சுட்டான். அவன் பின்னாடியே வெரடிண்டு எங்கப்பாவும் ஓடினார். அவன், எங்க அப்பாவை கல்லைக் கொண்டு மண்டையில எறிஞ்சுட்டு தப்பிச்சுட்டான். அப்போ எங்க அப்பா நெத்தில பட்ட ,காயத்தோடு தழும்பு, எனக்கு இன்னும் ஞாபகம் இருக்கு.
சங்கரலிங்கம், வெள்ளச்சாமி, கருப்பசாமி எல்லாரும் கொத்தனார்கள்(masons). தேவமார் தெருவுக்கு எதிர்ப்பக்கம் செவத்தியாந்தோட்டம் ( செபாஸ்டியான்னு சொல்ல வராது.அதனால மக்கள் , அவன் பேர,பேர் வாயில easyய நொழயரமாதிரி செவத்தியான்னு தான் கூப்பிடுவா). அந்த தோட்டம் எங்களோடது அதை ,அவன் தான் விவசாயம் பண்ணுவான். ஏன்னு தெரியாது.
எங்க அப்பா செத்துப்போனப்பறம் நாங்க செவத்தியானுக்கு தான் அந்த தோட்டத்தை விலைக்கு வித்தோம் . பத்திரம் பதிச்சு கொடுத்துட்டோமான்னு தெரியல. வித்த விலை என்ன தெரியுமா 200ரோ 300 ரோதான்.
அத விடு ,இப்போ செவத்தியான் தோட்டத்துக்குப் போறோம். உள்ள நுழைஞ்ச உடனே மேற்கு பக்கமா ஏழு அல்லது எட்டு பப்பாளி மரம் பெருசு பெருசா இருக்கும். மரம் முழுக்க பப்பாளிக்காய் ,பழம் ,காச்சுக்கிடக்கும். பறிக்க ஆளில்லாம கணிஞ்ச பழம் கீழே விழுந்தது ஒடஞ்சு கெடக்கும். அந்த ஊருல இருக்கிற வரைக்கும் அந்த பழம் என்ன ருசின்னு எனக்குத் தெரியாது.
உள்ள,இன்னும் கொஞ்சம் போனா ஒரு கெணறு. மொட்ட கெணறு. கைப்பிடி சுவர் கூட கடையாது.
ஏற்றம் இறைப்பது
கெணத்துக்கு மேலே , நிக்கறதுக்கு ,ஒரு இடத்துல மட்டும் ஒரு படி மாதிரி 2 அடிக்கு 2 அடி ஒரு கல் பதிச்சுருப்பா. 9அதன் மேல நின்னு தான் ஏற்றம் எரச்சு,தண்ணி எடுத்து, தோட்டத்துக்குப் பாச்சணும்.
அந்தத் தோட்டத்துல சக்கரவள்ளி கெழங்கு பயிர் பண்ணுவான்.
ஏர் உழுது(கலப்பை வைத்து)
அந்தக் கெழங்கு பயிர் பண்றது எப்படின்னு சொல்ரேன்.l ஏற்கனவே இருக்கிற கொடிய நட்டுத்தான்பயிர் பண்ணனும். ஏற்கனவே இருக்கிற கொடிய எடுத்து , நடுவுல இருக்கிற கொடி , நுனியில இருக்கிற கொடி, ரெண்டையும் 2அடி2 நீளத்துக்கு துண்டு துண்டா வெட்டி வச்சுக்கணும்.நுணிக்கொடி தனியாவும் நடுகொடி தனியாவும் பிரிச்சு வச்சுக்கணும். இதைத் தயார் பண்றதுக்கு முன்னாடியே நிலத்தை நன்னா உழுது, பாத்தி கட்டி தயாரா வச்சுக்கணும். அப்புறம் அந்த பாத்திக்கெல்லாம் தண்ணி பாச்சணும். மறுநாள் ஒரு அடி அல்லது ஒன்னரை அடி இடைவெளியில அந்த பாத்திக்குள்ள தானம்போடணும் (தானம் போடரதுன்னா பெரிய மரக்கட்டைய வெச்சு குழி போடறது.). ஏற்கனவே நுணிக்கொடி தனியா நடுகொடி தனியா பிரிச்சு வெச்சுண்டிருக்கோமில்லயா ? அதை ஒன்னொன்னா எடுத்து அந்த குழிக்குள்ள நடனும். நுணிக்கொடின்னா, அப்படியே அடிப்பக்கம் குழிக்குள்ள இருக்கிறமாதிரி நடனும். நடுக் கொடின்னா, ரெண்டு நுணியும் மேல தெரியற மாதிரி நடனும். முழுசா நட்டு முடிச்சப்பறம், மூணு அல்லது நாலு நாளைக்குக் காயவிடணும். அப்புறம் வாராவாரம் தண்ணி பாச்சணும். மாசாமாசம், களைகளை எடுக்கணும்.சக்கரவள்ளி கெழங்கு தரையிலேயே கொடி மாதிரி படரும்.அந்தக் கொடி ஒவ்வொரு கணுலயும் வேர் போடும் .அந்த வேர்களிளெள்ல்லாம் கீழ கெழங்குவெளையாது. காத்துல அந்தக் கொடி பிஞ்சு போகாம இருப்பதற்காகத்தான் அந்த வேர் உதவும்.
கீழ கெழங்கு வெளஞ்சதுக்கப்புறம் அந்த கொடியோட அடிபாகம் பழுத்துவிடும்.கெழங்கு நன்னா வெளையரதுக்கு 100லிருந்து 120 நாட்கள் ஆகும். கீழே கெழங்கு எடுக்கர பருவம் வந்துடுத்தான்னு பாக்க , கீழே சில இடங்கள்ல தோண்டிப் பார்த்தா தெரியும். கெழங்கு நிலத்திலிருந்து எடுக்கறதுக்கு 2 நாள் முன்னாடி தண்ணி பாச்சணும். அப்பதான் நிலம் மிருது வாகும்.
கெழங்கு எடுக்கணும்னு முடிவு பண்ணிட்டா,அந்த கொடி எல்லாத்தையும் எடுத்துடுவா. அந்த கொடியை ,காயர்துக்கு போட்டுடுவா. அது எதுக்குன்னா அந்தக்கொடி நல்ல மாட்டுத் தீவனம். காஞ்சு போனாலும் மாடு நண்ணா சாப்டும். நெறைய பால் சொரக்கும். நல்ல சத்து.
சரி, நிலத்திலிருந்து எல்லா கொடியையும் எடுத்தப்பரம்,அந்த இடம் முழுக்க ஒரு அங்குலம் கூட விடாம, வாச்சாத்து, கூந்தாளம் , வச்சு தோண்டி, எல்லா கெழங்கையும் எடுத்துடுவா.
வெரகு பிளப்பது
அப்படி எல்லாத்தையும் எடுத்துட்டாக்கூட, சில கெழங்குகள் தப்பிடும். அதுக்குப் பேரு தப்புகெழங்கு. அதப் பத்தியெல்லாம் ,நெலத்துக் காரா கவலைப்படமாட்டா. சின்ன பசங்க பத்து இருபது நாள் கழிச்சு அந்த எடத்த உண்ணிப்பா கவனிப்பா. அப்படி பாக்கும்போது கெழங்கு இருக்கற எடத்திலிருந்து அந்தக் கெழங்கு மொள விட்டுண்டு மேல தலையை நீட்டும். அத பாத்த ஒடனே ஊர்ப் பசங்க அந்த எடத்த தோண்டுவா. அந்த எடத்துல நிச்சயமா கெழங்கு இருக்கும்.
அந்த கெழங்கு ,சில சமயம் செவப்பாவும்,சில சமயம். மஞ்சளும் வெள்ளயுமா,கலந்த கலரா இருக்கும்.அதை த்தோண்டி எடுத்து,பசங்க பங்கு போட்டுப்பா.பொதுவா கெழங்க குருக்க வெட்டிப் பாத்தா,வெள்ளயாத்தானே இருக்கும், ஆனா செல கெழங்குகள் ஆரஞ்சு கலருல இருக்கும். அது சிந்தாமணி கெழங்குன்னு ஒரு ரகம். அது சாப்ட ரொம்ப, தித்திப்பா இருக்கும். சரி, செவத்தியான் தோட்டத்தயும், அவன் பயிர்பண்ண சக்கரவள்ளி க்கெழங்கையும் பார்த்தாச்சு.அடுத்த பக்கத்துல அவனப்பத்தி பாப்போம். ...
Comments
Post a Comment